சென்னை:செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில், கடந்த 10 ஆண்டுகளாக உபயோகித்து வரும் ஏர்டெல் இணையதள சேவை 2023ம் ஆண்டு ஜூலை மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தும் புகாரை உரிய விசாரணை செய்யாமல் முடித்து வைத்தனர்.
இதேபோல 3 முறை சேவை துண்டிக்கப்பட்டபோதும் இதே நடைமுறையை வாடிக்கையாளர் சேவை மையத்தினர் செய்து வந்தனர். இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்துக்கு நேரடியாக புகார் அளித்ததாகவும், இதையடுத்து இணையதள இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது என்றும் தேவராஜன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏர்டெல் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்ட தீர்ப்பின் நகல் (Credits - ETV Bharat Tamilnadu) இந்த புகாரின் மீதான விசாரணையின்போது, 'ஏர்டெல் நிறுவனம் தரப்பில், இணையதள சேவை நிறுத்தப்பட்டதை சரிசெய்ய பூமியில் பள்ளம் தோண்ட மாநகராட்சியின் அனுமதி பெற காலதாமதம் ஏற்பட்டது' என தெரிவிக்கப்பட்டது.
புகாரை விசாரித்த சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன் மற்றும் ராமமூர்த்தி அமர்வு, "ஏர்டெல் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் புகார்தாரர் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நிறுவனத்தின் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. அதனால் புகார்தாரருக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 2 ஆயிரம் ரூபாயும் 2 மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். தவறினால் 9 சதவிகித வட்டியுடன் சேர்த்து இழப்பீட்டை வழங்க வேண்டும்" என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.