சென்னை: நாடு முழுவதும் இன்னும் ஒரு மாத காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் குறித்த பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, ஆந்திர மாநிலத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இணைந்து இம்முறை களமிறங்குகின்றன. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 24 சட்டப்பேரவை தொகுதிகளும், 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகள் ஜன சேனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (பிப்.25) சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். நடைபெற உள்ள தேர்தலுக்காகச் சென்னையில் வசிக்கும் ஆந்திர மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் இந்த ஜன சேனா கட்சியின் கூட்டமானது நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.