சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், எண்ணூர், எர்ணாவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வெளி வாகனத்தில் வந்த பால் கனகராஜ், எர்ணாவூர் எரணீஸ்வரர் கோயில் பஜனை கோயில் தெரு, காமராஜர் நகர் மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முருகப்பா நகர், ராமநாதபுரம் ஜோதி நகர் அதனைத் தொடர்ந்து ஆறாவது வார்டு பகுதியான சண்முகபுரம் சந்திப்பு, ராஜா சண்முகம் நகர் கலைஞர் நகர் போன்ற பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது எர்ணாவூர் பகுதியில் பெண்கள் வேட்பாளர் பால் கனகராஜுக்கு ஆரத்தி எடுத்தனர் வரவேற்றனர். பிரசாத்தை முடித்து பால் கனகராஜ், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்திக் கொடுப்பதற்காகவும் மக்களுடைய முக்கிய பிரச்சனையைச் சரி செய்ய 25 வாக்குறுதிகள் தயார் செய்து மக்களுக்கு அளித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
பின்னர் திமுக 11 முறையும், அதிமுக 1 முறையும் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் மூலமாக அப்பகுதியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டை பெற்றுக் கொண்டு மக்களுக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.