செங்கல்பட்டு:மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த ஆலையில் டிசம்பர் மாத பருவத்தில் கரும்பு அரைக்கும் பணி துவங்கும்.
இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்பு இந்த ஆலைக்குக் கொண்டு வரப்பட்டு அரைக்கப்படும். பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் கரும்பை இந்த ஆலைக்கு எடுத்து வருவது வழக்கம். கரும்பு அரவை ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து ஆறு மாத காலம் வரையில் ஆலை இயங்கும். அடுத்த ஆறு மாத காலத்திற்கு இயந்திரங்களைப் பழுதுப்பார்த்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சக்கரை உற்பத்திக்காக கடந்த டிசம்பர் மாதம் ஆலை செயல்படத் தொடங்கியது.
இதனிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரவைப் பணி, நான்கு நாட்களாக நடைபெறாமல் இருந்தது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு, இந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து மீண்டும் பணி துவங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் சுமார் 360 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு முறையான ஊதியம் அளிக்கப்படவில்லை என்பது நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், ஊதிய உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் இவர்களின் நெடுநாள் ஆதங்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியை, மாதம் ஒருமுறை ஆலை நிர்வாகம் நேரடியாக வங்கியில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், நேற்று (ஜன.25) திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, சர்க்கரை ஆலையில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு இவ்வாலையில் 1800 முதல் 2000 டன் வரை கரும்பு அரவை நடைபெறுகிறது. தொழிலாளர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்கு, 20 லட்சம் வரை நிர்வாகத்திற்கு இழப்பீடு ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, விவசாயிகள் கொண்டு வந்த கரும்புகள் டிராக்டரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், வெயில் காரணமாக அவற்றின் எடையும் குறைய வாய்ப்புள்ளது என்பது அவர்களின் கூடுதல் வருத்தமாக உள்ளது. மறு உத்தரவு வரும்வரை விவசாயிகள் தோட்டத்திலிருந்து கரும்பை வெட்ட வேண்டாம் என்றும் வெட்டிய கரும்பை நிலத்திலேயே வைக்கவும் வாய்மொழி உத்தரவிட்டதாகவும் கூறப்படுவது விவசாயிகளை மேலும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க:பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு: புழல் சிறையில் அடைக்கப்பட்ட திமுக எம்எல்ஏ மகன், மருமகள்!