தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் அடிபட்டு 317 பேர் உயிரிழப்பு.. சேலத்தில் 9 மாதங்களில் நடந்த துயரம்.. காரணம் என்ன? - salem railway zone accident

சேலம் ரயில்வே உட்கோட்ட பகுதியில் கடந்த 9 மாதத்தில் ரயிலில் அடிபட்டு 317 பேர் உயிரிழந்து இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சேலம் ரயில் (கோப்புப்படம்)
சேலம் ரயில் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 11:34 AM IST

சேலம்:சேலம் ரயில்வே உட்கோட்ட பகுதியில் கடந்த 9 மாதத்தில் ரயிலில் அடிபட்டு 317 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், அதில் 43 பேர் யார் என்று அடையாளம் தெரியவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், தருமபுரி, ஓசூர், காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 9 மாதத்தில் இந்த உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

சேலத்தில் 110 பேரும், தருமபுரியில் 15 பேரும், ஜோலார்பேட்டையில் 112 பேரும், காட்பாடியில் 70 பேரும், ஓசூரில் 10 பேரும் என மொத்தமாக 317 பேர் ரயிலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். குறிப்பாக, விருதாச்சலம் - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:"துணை முதலமைச்சர் பொறுப்பை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம்" - காடேஸ்வரா சுப்பிரமணியம்!

மேலும், “இந்த மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதி மக்கள் தினமும் காலையில் தண்டவாளப் பகுதியை இயற்கை உபாதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலர் ரயிலில் அடிபட்டு இறக்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்த, அவ்வப்போது ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில்வே தண்டவாளத்தில் அசுத்தம் செய்பவரைப் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்” என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சேலம் உட்கோட்ட பகுதியில் உள்ள லெவல் கிராசிங் தண்டவாளப் பகுதியில் உள்ள கிராம மக்களை பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தி, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

ரயில்வே தண்டவாளத்தை மிக கவனத்துடன் கடக்க வேண்டும், போதையில் தண்டவாளப் பகுதிக்குச் செல்லக்கூடாது, லெவல் கிராஸ் பகுதியில் செல்லும்போது கவனத்துடன் செல்ல வேண்டும், ரயில் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்று ரயில்வே போலீசார் பொதுமக்களிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் தெரிவிக்கையில், படிக்கட்டில் பயணம் செய்பவர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகிறோம். இனி வரும் காலங்களில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details