சென்னை:சென்னை அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் பொன்னேரி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் குமார் (25) என்பவருக்கு வலது காலில் காயம் இருப்பதால் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. அதே போல் உத்திரபிரதேசத்தை பிரியான்சோ( 25) இடது கண்ணில் மேல் பகுதியில் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 22 வயதான ராகுல் குமார் என்பவருக்கு இடது காலில் எலும்பு முறிவு காரணமாக கட்டு போடப்பட்டுள்ளது என மருத்துமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாத்ரூமில் சிக்கிக் கொண்டேன்:இந்த விபத்து குறித்து ரயிலில் பயணம் மேற்கொண்ட ரோசன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,"பெங்களுரில் இருந்து உத்திர பிரதேசம் போக அந்த ரயிலில் பயணித்தேன். நான் பாத்ரூமில் இருந்தேன் பிரியான்சோ கை கழுவ ரயில் கதவிடம் சென்றார் அப்போது தான் விபத்து நடந்தது.
இதனையடுத்து ரயிலிலிருந்த அனைத்து மக்களும் ரயிலில் வெளியேறி ஓடிக்கொண்டிருந்தனர். நான் அப்போது பாத்ரூமில் சிக்கிக் கொண்டேன். உடனே பாத்ரூம் கதவை உடைத்து என்னை வெளியேற்றினர். அப்போது என்னுடன் வந்தவர் அங்கு இல்லை. அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று விட்டனர். மேலும் விபத்து நடந்த உடனேயே காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். எனக்கு காயம் ஏற்படவில்லை என் உறவினருக்கு தலையில் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:6 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!