தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுவானில் இறந்த பயணி.. அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட மலேசியன் விமானம் - நடந்தது என்ன? - passenger dies on malaysia flight - PASSENGER DIES ON MALAYSIA FLIGHT

Passenger dies on Malaysia flight: கோலாலம்பூர் - தோகா மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், திடீரென பயணி ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நள்ளிரவில் விமானம் தரையிறக்கப்பட்டது.

malasiya airlines
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (Credits - Malasiya airlines X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 2:59 PM IST

சென்னை:மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கத்தார் நாட்டின் தோகா செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 254 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் சென்னை வான்வெளியைக் கடந்து சென்று கொண்டு இருந்துள்ளது. அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த ரேமண்ட் செல்வராஜ் (54) என்பவர், தனது குடும்பத்தினர் மூன்று பேருடன் விமானத்தில் பயணித்துக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, ரேமண்ட் செல்வராஜ் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர், உடனடியாக விமான பணிப்பெண்களிடம் தெரிவித்துள்ளனர். விமான பணிப்பெண்கள் இந்த தகவலை தலைமை விமானியிடம் கூறியதை அடுத்து, தலைமை விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்துள்ளார்.

அப்போது சென்னை விமான நிலையம் தான் அருகில் இருக்கிறது என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் அவசரமாக தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை உதவி தேவைப்படுகிறது. எனவே, விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என மலேசியன் ஏர்லைன்ஸ் விமானி கேட்டுள்ளார். இதற்கு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மலேசியன் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்க அனுமதி அளித்தனர்.

இதை அடுத்து, கோலாலம்பூர் - தோகா இடையே சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நள்ளிரவு 12.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்த விமான நிலைய மருத்துவக் குழுவினர், விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும் உடனடியாக விமானத்துக்குள் சென்று பயணியை பரிசோதித்தனர்.

ஆனால், பயணி ரேமண்ட் செல்வராஜ் தனது இருக்கையில் உயிரிழந்த நிலையில் அமர்ந்திருந்தார். இதை அடுத்து, அவர் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், ரேமண்ட் செல்வராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மூன்று பேருக்கு அவசர கால விசா வழங்கினர்.

அதோடு, சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த போலீசார், ரேமண்ட் செல்வராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின், மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு 250 பயணிகளுடன் கத்தார் நாட்டின் தோகாவுக்கு புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிங்க:சென்னை ஏர்போர்ட்டுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த வார்னிங்! - Bomb Threat issue

ABOUT THE AUTHOR

...view details