தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் 'திடீர்' மாரடைப்பு - மலேசிய பெண் உயிரிழப்பு! - PASSENGER DEATH

மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீர் நெஞ்சு வலியால் பெண் உயிரிழந்தார்.

சென்னை விமான நிலையம் - கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2025, 9:58 AM IST

சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் 242 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் சென்னை வான் வெளியை கடந்து சென்று கொண்டிருந்த போது மலேசியவைச் சேர்ந்த காலிஜா (41) என்ற பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தார்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் அபுபக்கர் விமான பணிப்பெண்களிடம் அவசர உதவி கேட்டார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் அந்த பெண் பயணிக்கு அவசரமாக முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அந்தப் பயணியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டியது இருந்ததால் தலைமை விமானியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தில் உள்ள ஒரு பெண் பயணிக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதால் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்க அனுமதி வேண்டும் என்று கேட்டார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரை இறங்க அனுமதி அளித்தனர். மேலும் சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினருக்கும் அவசரமாக, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து மருத்துவக் குழுவினரையும் தயார் நிலையில் சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே இருக்க செய்தனர்.

இந்தநிலையில் அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பெண் பயணியை பரிசோதித்த போது அவர் கடுமையான மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிர் இழந்துவிட்டார் என்று தெரியவந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்தின்படி உள்ள நடைமுறைகள் முடிவடைந்த பின்பு அந்த பெண் பயணியின் உடல் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் கணவர் அபுபக்கருக்கும் குடியுரிமை அதிகாரிகள் தற்காலிக விசா வழங்கினர். அதன் பின்பு அவரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி விட்டார். சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள மலேசிய நாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தினர்.

அப்போது அபுபக்கர் அவர் மனைவி காலிஜாவுடன் மதினாவுக்கு புனித பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு சொந்த நாட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details