சென்னை:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் நடிகர் விஜயின் தவெக முதல் மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக விடிய விடிய தொண்டர்கள் மாநாடு நடைபெறும் அரங்குக்கு வருகை தந்தபடி இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான முறையில் மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து தவெக தொண்டர்கள் நேற்று இரவில் இருந்த வரத்தொடங்கி விட்டனர்.
தவெக கொடியுடன் வரும் வாகனங்கள்:தவெக கொடிகளை கட்டியபடி இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள், பேருந்துகளில் தொண்டர்கள் வருகின்றனர். இன்று காலையில் தொண்டர்கள் வருகை அதிக அளவு இருந்தது. அதிக வாகனங்கள் ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து நெரிசல் நேரிட்டுள்ளது.
தொண்டர்களுக்கு தயாராகும் நொறுக்கு தீனிகள் (Credit - ETV Bharat Tamil Nadu) மாநாட்டுக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி இருபுறங்களிலும் மாநாட்டிற்கு வருபவர்களுக்கான பார்க்கிங் வசதிகள் நான்கு இடங்களில் செய்யப்பட்டுள்ளன. பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இருந்து தொண்டர்கள் நடந்து வருவதற்கு சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் உட்காரும் சேர்களை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டனர். ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய தொண்டர்கள், "வெயில் கடுமையாக இருந்தாலும் விஜய்க்காக இங்கு வந்துள்ளோம்.. வெயில், மழை பார்க்காமல் எவ்வளவு நேரம் இருந்தாவது அவரை பார்த்துவிட்டு செல்வோம்,"என கூறினர்.
வெயிலின் தாக்கத்தால் தவிக்கும் தொண்டர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu) உணவு வசதிகள்:ஈடிவி பாரத் தமிழ்நாடுவுக்கு பேட்டியளித்த தவெக நிர்வாகிகள்,"மாநாட்டுக்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அதற்கு ஏற்ற வகையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக்சர், பிஸ்கெட், தண்ணீர் பாட்டில் கொண்ட நொறுக்கு தீனி பாக்கெட்கள் தொண்டர்களுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து வரும் தொண்டர்கள் எண்ணிக்கையை பார்க்கும்போது 20 லட்சம் பேர் கூட மாநாட்டுக்கு வருவார்கள் என்று தெரிகிறது. அதிகம் பேர் வந்தாலும் கூட அதனை சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்,"என்று கூறினர்.
தண்ணீர் பாட்டிலை வாங்க குவிந்த தொண்டர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu) நொறுக்கு தீனிகள் மற்றும் தண்ணீர் பாட்டில் வாங்க தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாநாட்டு பந்தலில் உணவு,நொறுக்கு தீனிகள் வழங்கப்பட்டபோதிலும், சாலையின் இருபுறங்களிலும் உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதனிடையே வேலூரில் இருந்து மாநாட்டில் பங்கேற்க வந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் மாநாட்டு பந்தலில் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :தேர்தல் களத்தில் வாக்காளர்களை எதிர்கொள்ள தவெகவுக்காக என்ன சின்னத்தை விஜய் கேட்கப்போகிறார்?
மாநாட்டு முகப்பின் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொண்டர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழுவும் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் இருந்தும் தவெக மாநாட்டுக்கு ஏராளமான தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் தொண்டர்களுக்கு குடிநீர், நொறுக்கு தீனிகள் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன. மாலை வரை தொண்டர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் தவெக மாநாட்டில் லட்சகணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்