மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. சிறுவனின் பிரேத பரிசோதனையின் முடிவை மருத்துவமனை அதிகாரிகள் வழங்காமல் உள்ளதாகவும் சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை அருகே மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆசிரியர் பாலசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பு படிக்கும் இவருடைய மகன் கிஷோருக்கு, வயிற்றுவலி காரணமாக கடந்த ஜனவரி 29ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடல்வால் (Appendix) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக கிஷோர் நேற்று (பிப்.2) உயிரிழந்துள்ளார்.
சிறுவன் கிஷோர் உயிரிழந்ததை தங்களிடம் கூறாமல், கிஷோருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், மேலும், 12 வயது சிறுவனுடைய வயதை கருத்தில் கொள்ளாமல், உடல் எடையை வைத்து அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்டதாகவும் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, சிறுவனின் உயிரிழப்பிற்கு தவறான சிகிச்சையே காரணம் என குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள், தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், முன்னதாக சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும், மருத்துவத்துறை அதிகாரிகளும் வாக்குறுதி அளித்ததன் பேரில், உறவினர்களிடம் பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுவனின் உடல் கொடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெறுவதற்காக சிறுவனின் தந்தை பாலசுப்ரமணியன் மற்றும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நிலையில், அங்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிக்கையை வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து சிறுவனின் தந்தை பாலசுப்ரமணியன் மற்றும் அவரது உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உடற்கூறு ஆய்வின் அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதனால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அறிக்கையை வழங்க மாவட்ட நிர்வாகம் மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ஆய்வக சோதனைக்காக சிறுவனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஆய்வுக்கான மாதிரிகள் தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை வர ஒரு வாரத்திற்கு மேலாகும் எனவும், ஆகவே ஆய்வு அறிக்கை வந்தவுடன் பெற்றோரிடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தோடர் பழங்குடியின மக்களின் உப்பட்டும் திருவிழா.. பாரம்பரிய ஆடையுடன் வழிபட்ட மக்கள்!