தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் அதிரடி கைது.. சிக்கியது எப்படி? - Panchayat secretary arrest

தேனியில் வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்து தருவதற்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலர்
கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 9:44 PM IST

தேனி: கம்பம் அருகே வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி சாவடி தெருவை சேர்ந்தவர் சிவானந்தன் (70). இவர் சுருளிப்பட்டி பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக சுருளிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் உள்ள சின்னச்சாமி என்பவரின் வீட்டின் பெயரில் கடன் கொடுத்துள்ளார். தொடர்ந்து கடன் தொகைக்காக நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்கின் அடிப்படையில் சிவானந்தனுக்கு வீடு சொந்தம் என்று தீர்ப்பு வந்துள்ளது. உத்தரவையடுத்து, சிவானந்தனுக்கு நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வீட்டினை மீட்டெடுத்து கொடுத்துள்ளனர்.அதனைத்தொடர்ந்து, அந்த வீட்டின் மீதான வரி ரசீதினை சிவானந்தன் பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி கடந்த எட்டு மாதத்திற்கு முன்பாக சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இழுப்பறி செய்த ஊராட்சி:ஆனால், ஊராட்சி சார்பில் பெயர் மாற்றம் செய்து தராமல் தொடர்ந்து இழுப்பறி செய்து வந்துள்ளனர். தொடர்ந்து சிவானந்தன் ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று இது குறித்து மனு கொடுத்துள்ளார். ஆனால், கடந்த 8 மாத காலமாக அவருக்கு பெயர் மாற்றம் செய்து தராமல் அலைக்கழிப்பு செய்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க:“செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் உண்டா?" அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

லஞ்சம் கேட்டஊராட்சி செயலாளர்:இந்நிலையில், வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்து தருவதற்கு சுருளிப்பட்டி ஊராட்சி செயலர் சந்திரசேகர் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இரண்டாயிரத்தை குறைத்துக்கொண்டு ரூ.8 ஆயிரம் தருவதாக சிவானந்தன் தெரிவித்துள்ளார்.ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவானந்தன், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பு: பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில், ஆய்வாளர் ஜெயப்பிரியா மற்றும் ஆறு பேர் கொண்ட காவல்துறையினர் சுருளிப்பட்டி பகுதியில் மறைந்திருந்து கண்காணித்துள்ளனர்.

ஊராட்சி செயலாளர் கைது: இந்நிலையில், இன்று காலையில் சிவானந்தன் பணத்தினை சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலர் சந்திரசேகரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக சந்திரசேகரனை பிடித்தனர். இதனையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பிறகு சுருளிப்பட்டி ஊராட்சி செயலாளர் சந்திரசேகரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் முக்கிய ஆவணங்களுடன் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details