புதுக்கோட்டை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9A நத்தம் பண்ணை ஊராட்சி அடப்பன்காரசத்திரத்தில் கிராம சபைக் கூட்டம் இன்று(அக் 2) நடைபெற்றது.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாபுவிற்கு, இந்த கிராம சபைக் கூட்டம் கடைசி கூட்டம் என்பதால் பொதுமக்களிடம் தான் செய்த பல்வேறு பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.
அதேபோல், கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு பொதுமக்கள் தானாக முன்வந்து 1098க்கு புகார்களை தெரிவிக்க வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊராட்சிமன்றத் தலைவர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், இக்கூட்டத்தில் ஐந்தாண்டு காலம் அப்பகுதியில் பல்வேறு தூய்மை பணி மேற்கொண்ட 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சார்பில் பொன்னாடை அணிவித்து பழக்கூடைகள் கொடுத்து மாலை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்குள்ள மக்கள் மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தான் குடும்பம் நடத்தி வந்தார்கள். இந்த நிலைமையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சியாக மாற்றும் போது 100 நாட்கள் வேலைத்திட்டம் வராது. ஆனால் வரும் என சொல்கிறார்கள். அது எப்படி வரும். அது ஒரு ஏமாற்று வேலை.
இந்த மாநகராட்சிக்கு கொடுத்தால் அனைத்து மாநகராட்சிக்கும் கொடுக்கனும். இந்த கிராம சபைக்கூட்டம் எனக்கு கடைசி கூட்டம். நான் செய்த பணிகளிலேயே மிகவும் சிறப்பானது என்றால் அங்கன்வாடி மையத்தை சுத்தமாக வைத்தது தான். இந்த பணி என் மனதுக்கு நிறைவாக உள்ளது" என தெரிவித்தார்.
இக்கூட்டம் முடிந்து ஊராட்சி மன்றத் தலைவர் கிளம்பி செல்லும் பொழுது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி ஊராட்சி மன்றத் தலைவர் பாபுவின் கைகளைப் பிடித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தீர்கள். நீங்கள் தான் எங்களுக்கு மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவராக வரவேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை எங்களுக்கு வாங்கி தர வேண்டும் என கண்ணீர் மல்க கதறி அழுது ஊராட்சி மன்றத் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.
மேலும், பல பெண்கள் 100 நாள் வேலையை எங்களுக்கு வழங்க வேண்டும் மாநகராட்சியில் எங்கள் ஊராட்சியை சேர்த்து 100 நாள் வேலையை பறிக்கக் கூடாது. 100 நாள் வேலை தான் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கண்ணீர் மல்க தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கோரிக்கை வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்