தஞ்சாவூர்:தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விளங்குகள், பறவைகள் மற்றும் கால்நடைகள் உணவு தேடியும் மேய்ச்சலுக்காகவும் வெளியே வரும் போது, நீரின்றி தவித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஊராட்சி மன்ற நிர்வாக, தண்ணீர் தொட்டி அமைத்துக் கொடுத்து, அதில் தண்ணீர் நிரப்பும் செயல், அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்து, பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு உள்ளது. இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானோர், விவசாயிகளாகவும், கால்நடை வளர்ப்போராகவும் உள்ள நிலையில் வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் மற்றும் பறவைகள் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்து வந்துள்ளன.