மதுரை: மண்டபம் - ராமேஸ்வரம் பகுதிகளை கடல் வழியே இணைக்கும் புதிய பாம்பன் பாலம் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், நவம்பர் 14ஆம் தேதி தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்திய ரயில்வேயின் பொறியியல் அதிசயமாக தலை நிமிர்ந்து நிற்கும் பாம்பன் புதிய ரயில் பாலம், மண்டபம் - ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் மிகப் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடல் வழியே கடந்து செல்லும் கப்பல்கள் தடையின்றி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலம் 17 மீ உயரத்திற்கு செல்லும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்தின் கெளரவம்
புதிய பாம்பன் ரயில் பாலத்தின் முழு தோற்றம் (ETV Bharat Tamil Nadu) சுமார் 2.8 கி.மீ. நீளமுள்ள புதிய கடல் பாலத்தின் நடுவே பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் பாலத்தின் நடுவே 72.5 மீட்டர் உயரம் கொண்ட லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தில் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது முக்கியமானது.
இந்த புதிய பாலம் செங்குத்தாக உயர்த்தி திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைய இருக்கிறது. பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் நடுவில் உள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள வாகன போக்குவரத்து பாலத்திற்கு இணையான உயரம் ஆகும்.
லக்னோ ரயில் ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையின் பேரில் பாலத்தின் கிர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்திரக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. அங்கிருந்து வடிவமைத்துக் கொண்டு வரப்பட்ட கிர்டர்கள் மற்றும் லிஃப்டிங் ஸ்பேன் ஆகியவை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
கடலில் 333 காங்கிரிட் அடித்தளங்கள், 101 காங்கிரிட் தூண்கள் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது.
மிகப்பெரும் உள்கட்டமைப்புகள்:
புதிய பாம்பன் ரயில் பாலத்தின் தாழ்வாரப் பகுதி (ETV Bharat Tamil Nadu) இதன் மூலம் ரயில்கள் உரிய வேகத்தில் குறித்த காலத்தில் சென்று வர முடியும். புதிய பாலத்தை பெரிய கப்பல்கள் எளிதாக கடந்து சென்று தொழில் பொருளாதர வளர்ச்சி மேம்பாடு அடைய வாய்ப்பாக அமையும். நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படும் இந்த புதிய பாலம் எந்தவித பழுதும் இல்லாமல் நீண்ட காலம் சேவையாற்ற வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய பாலத்தின் வாயிலாக வட்டார தொழில் பொருளாதார வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.
இது போன்ற பெரிய கட்டமைப்புகளை உருவாக்கும் இந்திய ரயில்வேயின் முயற்சி ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் ரயில் போக்குவரத்தின் மூலம் பல்வேறு பகுதிகளை இணைக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை. அருகில் உள்ள பாம்பன் ரயில் நிலையத்தில் நடைமேடை உயர்த்தும் பணி மற்றும் வளர்ச்சி பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
இந்த புதிய பாம்பன் பாலத்தை ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடட் நிர்மாணித்துள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி புதிய பாம்பன் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து உயர ஏற்றி இறக்கும் அமைப்பு ஏற்றி இறக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பு அம்சங்கள்
புதிய பாம்பன் ரயில் பாலம் (ETV Bharat Tamil Nadu) - இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கிப் பாலம் என்ற பெருமையைப் பெறுகிறது
- புதிய பாம்பன் பாலம் கடலில் 6 ஆயிரத்து 790 அடி நீளத்தில் (சுமார் 2.8 கி.மீ) அமைகிறது
- கடலின் குறுக்கே 100 வளைவுகளைக் (ஸ்பான்) கொண்டுள்ளது
- 99 வளைவுகள் 18.3 மீட்டர் உயரமும், நடுவிலுள்ள செங்குத்து தூக்கி வளைவு 72.5 மீட்டர் உயரமும் கொண்டுள்ளன.
- அருகிலுள்ள 110 ஆண்டுகள் பழமையான ரயில் பாலத்தை விட புதிய பாலம் 3 மீட்டர் உயரம் கொண்டது
- எதிர்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையிலான அடித்தளமும் கட்டமைப்பும் கொண்டுள்ளது
- இந்த ரயில் பாதை ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பால் (ஆர்டிஎஸ்ஓ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது
- இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து தளவாடப்பொருட்களும் ராமநாதபுரம் அருகிலுள்ள சத்திரக்குடி ரயில் நிலையத்தில் இதற்கென்று அமைக்கப்பட்ட பட்டறையிலிருந்து தயாரிக்கப்பட்டதாகும்.
- கப்பல் போக்குவரத்து எளிதாக நடைபெறும் வகையில் முழு தானியங்கி அமைப்பில் எலக்ட்ரோ-மெக்கானிக்கல் சிஸ்டம் மூலமாக 17 மீட்டருக்கு உயர்த்தும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி இன்ஜின் மற்றும் 3 ரயில் பெட்டிகளுடன் புதிய பாம்பன் பாலத்தின் மீது 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம், வெற்றிகரமான ரயில் என்ஜின் ஓட்டமானது புதிய பாம்பன் பாலத்தின் துல்லியம் மற்றும் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது.
இது தமிழ்நாட்டில் மண்டபம்-ராமேஸ்வரம் பிரிவில் மணிக்கு 121 கிமீ வேகத்தையும், பாம்பன் பாலத்தில் மணிக்கு 80 கிமீ வேகத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது' என பெருமையுடன் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி ரயில்வேயின் தென் சர்கிள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாம்பன் பாலத்தை பார்வையிட்டு சோதனை நடத்த உள்ளார். அச்சமயம் நடுவில் உள்ள செங்குத்து கிர்டர் ஏற்றி இறக்கி சோதனை செய்யப்படுவதுடன், வேகமாக ரயிலை இயக்கி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் முன்னிலையில் சோதனை நடைபெற உள்ளது.
பாம்பன் வரலாறு
இரவில் ஒளிரும் புதிய பாம்பன் ரயில் பாலம் (ETV Bharat Tamil Nadu) சேதுபதி மன்னர்கள் காலம் வரை ராமேஸ்வரம் தீவுக்கு செல்ல மண்டபத்திலிருந்து கடல் வழியாக பக்தர்கள் படகை பயன்படுத்தி சென்று வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது 110 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் - ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் ரயில் பாலம் உருவாக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் ராமேஸ்வரம் தீவு பெருமளவு வளர்ச்சி காணத் தொடங்கியது.
அதற்குப் பிறகு சாலைப் போக்குவரத்திற்காக பாம்பனில் பாலம் கட்டப்பட்டு கடந்த 1988-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்திற்காக தனிப் பாலம் உருவாக்கப்பட்டாலும், கடலின் நடுவே ரயிலில் பயணிக்கும் அனுபவம் என்பது சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் கிளர்ச்சியூட்டக்கூடியது என்பதால், ரயில் பயணமும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நூற்றாண்டுகளைக் கடந்த ரயில் பாலம் கடல் காற்றின் காரணமாக அடிக்கடி துருப்பிடித்து பழுதடைவதும், அதற்கான பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பதும் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.
அதுமட்டுமன்றி கப்பல் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட சேர்ந்து விரியும் வகையிலான (செர்ஷர் ஸ்பான்) அமைப்பில் அவ்வப்போது பழுது நேர்வதும், இதனால் ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதும் என பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன. மேலும் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலத்தில் நிரந்தர வேகக்கட்டுப்பாட்டுக் கருவி உள்ளதால் ரயில்களை 10 கி.மீ. வேகத்தில்தான் இயக்க முடியும்.
இந்திய ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு புதிய ரயில் பாலத்தைக் கட்ட இந்திய ரயில்வே துறை முடிவு செய்து இதற்கான பணிகளைத் தொடங்க கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. பாம்பன் புதிய பாலத்திற்கான பணிகள் முழுவதும் நிறைவடையும்போது ரூ.550 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.