அரியலூர்:உடையார்பாளையம் அருகே உள்ள பெரியார் சமத்துவபுரம் பகுதியில், பழங்கால சிலை ஒன்று உள்ளதாக ஜெ.தத்தனூர் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர், அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில், அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மணியன் கலியமூர்த்தி தலைமையிலான குழுவினர், இந்த பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, உடையார்பாளையம் அருகில் கீழவெளி சமத்துவபுரம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில், மண்ணில் சாய்ந்தபடி ஒரு பலகை குறுஞ்சிற்பம் காணப்பட்டுள்ளது. அந்தச் சிற்பத்தை ஆய்வு செய்தபோது, அது 7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. சுமார் ஒன்றரை அடி அகலமும், ஒன்றரை அடி உயரமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அய்யனார் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அழகிய ஜடாபாரம் தலையை அலங்கரிக்க, வட்டமான முகமும், இரு காதுகளில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி அளிக்கிறது. உருளையான மணிகள் கோர்க்கப்பட்ட சரப்பள்ளி போன்ற மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு, இருக்கைகளிலும் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து காணப்படுகிறது. அதேபோல, உத்குதிகாசன கோலத்தில் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்து காணப்படுகிறது.
இடையில் உதிரபந்தமும், இடை ஆடையில் உறையுடன் கூடிய குறுவால் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. வலது கையை இடது காலின் முட்டி மீது வைத்து தாங்கியபடி, கரத்தில் செண்டை பற்றிக்கொண்டும், இடது கையைத் ஊறுகஸ்த நிலையில் வைத்து காணப்படுகிறது. இந்தச் சிற்பத்தின் அமைதியையும், அதில் காட்டப்பட்டுள்ள அணிகலன்களையும் வைத்துப் பார்க்கையில் இச்சிற்பம் கி.பி. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் காலத்தியதாக இருக்கக் கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 1,300 வருடம் பழைமையான சிற்பம் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தபடியே இருந்துள்ளதால், இந்தச் சிற்பத்தின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் வேப்பமரத்திற்கு கீழே இந்த அய்யனார் சிற்பத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.