திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜா (30). இவர் நேற்று தனது காதலியுடன் பாளையங்கோட்டை அடுத்த கேடிசி நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றபோது, மர்ம நபர்களால் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது, அங்கிருந்தவர்கள் எழுப்பிய சத்தம் கேட்டு ஹோட்டலுக்குள் இருந்து வெளியே வந்த அவரது காதலி, ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது காதலன் தீபக் ராஜாவைக் கண்டு கதறி அழுது துடித்துள்ளார்.
பட்டப் பகலில் நடைபெற்ற இக்கொலை சம்பவம் நெல்லையை உலுக்கியது. மேலும், தீபக் ராஜா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளும் வெளியானது. அதில், மர்மகும்பல் தீபக் ராஜா துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்துவிட்டு சாவகாசமாக காரில் புறப்பட்டு செல்வது பதிவாகியுள்ளது. குறிப்பாக மர்ம கும்பல் தீபக் ராஜாவின் முகத்தை குறி வைத்து வெட்டியிருப்பதால், பகை மற்றும் பழிக்கு பழியால் இக்கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணையில் இறங்கினர். குறிப்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தப்பி ஓடிய மர்ம கும்ப கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், கொலையாளிகளில் சிலர் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர். பிறர் துணியால் முகத்தை மறைத்திருந்தனர். இதனால், அவர்களை உடனே அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டலில் அருகில் உள்ள பிற சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி அந்த கார் எந்த வழியாக வந்தது, மீண்டும் எந்த வழியாக திரும்பி சென்றது என்பதையும் விசாரித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் மூர்த்தி உத்தரவின் பேரில், ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட தீபக் ராஜன் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபக் ராஜா பின்னணி:தீபக் ராஜா மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரையில் சுபாஷ் பண்ணையார் தோட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு, வல்லநாடு அருகே நடைபெற்ற தாத்தா, பேரன் கொலை வழக்கு, நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடந்த கட்டிட கான்ட்ரக்டர் கண்ணன் கொலை வழக்கு உட்பட பல முக்கிய கொலை வழக்குகளில் தீபக் ராஜன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பசுபதி பாண்டியன்: குறிப்பாக சாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த தீபக் ராஜா, குறிப்பிட்ட பிற சமுதாய நபர்களுடன் தொடர்ச்சியாக மோதல் போக்கை கடைபிடித்து வந்துள்ளார். மேலும் தீபக் ராஜா, 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.