பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணப்பட்ட வீடியோ (Credits: ETV Bharath Tamil Nadu) பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் நிரம்பியுள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், கோயில் உண்டியல் காணிக்கை மொத்தமாக ரூ.2.24 கோடியை தாண்டியது.
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் முழு ஆண்டுத்தேர்வு தொடர் விடுமுறை காரணமாக, கடந்த 27 நாட்களில் நிறைந்ததால் நேற்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர். இதில், பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் இரண்டு கோடியே 24 இலட்சத்து 86 ஆயிரத்து 568 கிடைத்தது.
உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், செயின் மற்றும் தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 848 கிராமும், வெள்ளி 13 ஆயிரத்து 575 கிராமும் இருந்தது.
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 409ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.50 கோடி வசூல்!