ஐதராபாத்: ஏறத்தாழ 29 ஆண்டுகளுக்கு பின்னர் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று துவக்கி வைக்கிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலத்தீவு உட்பட 7 நாடுகளில் இருந்து 210 வீரர், வீராங்கனைகள் 28 பிரிவு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தினமும் மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த விளையாட்டு தொடரில் இந்திய அணி சார்பில் 27 வீராங்கனைகள் உட்பட 58 பேர் கலந்து கொள்கின்றனர்.
இந்திய அணி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், ஆயிரத்து 500 மீட்டர், 3,000 மீட்டர், 110 மீட்டர் தடை ஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 13 பிரிவிகளில் உள்ள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். கடைசியாக 1995ஆம் ஆண்டு தெற்கு ஆசிய தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப் நடைபெற்ற நிலையில் அதன் பின் 29 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடைபெறுகிறது.