மதுரை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (HFA), அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 47 தூய்மைப் பணியாளர் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை, வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “போர்க்கால அடிப்படையில் மழை ஓய்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு கூட மாவட்ட நிர்வாகமும், பிற அரசுத் துறைகளும் இணைந்து வெள்ள சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
மதுரையில் பெய்த கனமழையினால் எந்தவொரு பாதிப்புகளும் ஏற்படவில்லை. கனமழையினால் தேங்கிய அனைத்து மழைநீரும் அகற்றப்பட்டுள்ளது. மதுரையில் எங்கே பாதிப்புகள் உள்ளன என எம்பி சு.வெங்கடேசன் கூற வேண்டும். எதற்காக நிவாரணம் கொடுக்க வேண்டும்? செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றுக்கு புதிதாக அமைக்கப்பட்ட வாய்க்காலை நிரந்தர வாய்க்காலாக கட்டுவதற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.