சென்னை: ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு இணைந்தது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம். ஆனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் கேபின் குழு ஊழியர்களுக்கும், ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 7) இரவு, கேரளா உட்பட சில மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏர் இந்தியா கேபின் குழு ஊழியர்கள் திடீர் விடுப்புகள் எடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள் இல்லாத காரணத்தால், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல், சென்னை விமான நிலையத்தில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் (மே 7) நள்ளிரவு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து மறுநாள் (மே 8) அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்லும் இரண்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. மற்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று (மே 9) இரண்டாவது நாளாக, சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்து விட்டு பணிக்கு வராத காரணத்தால், விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பொறியாளர்கள் இல்லாமல், மொத்தம் 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், நேற்று (மே 8) நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நள்ளிரவு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இன்று (மே 9) மதியம் 12.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று (மே 9) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து இன்று (மே 9) காலை திருவனந்தபுரம், சிங்கப்பூர், கொல்கத்தா மற்றும் இரவில் மீண்டும் கொல்கத்தா புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஏறத்தாழ 100 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று (மே 9) ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் கேபின் குழு ஊழியர்களில் 25 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும், "ஆதாரங்களின் அடிப்படையில், 25 கேபின் குழு ஊழியர்கள் எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் முன்கூட்டியே திட்டமிட்டு, ஒருங்கிணைந்து பணிக்கு விடுப்பு எடுத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கியுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சென்னை டூ துபாய் விமானத்தில் திடீர் கோளாறு.. 376 பேர் உயிர் தப்பியதன் பின்னணி என்ன?