தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரங்கம்பாடியில் பருவம் தவறி பெய்த மழையால் 20,000 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் சேதம்! விவசாயிகள் வேதனை... - CROPS DAMAGE

மயிலாடுதுறையில் பருவம் தவறி பெய்த கன மழையால் 20,000 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேதமான பயிர்களுடன் விவசாயிகள்
சேதமான பயிர்களுடன் விவசாயிகள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2025, 8:08 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் நடப்பாண்டு 45,000 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழையில் தப்பிய பயிர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகையான் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டது.

இதனால் கூடுதல் செலவு செய்து மருந்துகள் அடித்து பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர். இந்நிலையில், நேற்று (ஜன.18) இரவு முதல் இன்று காலை வரை பருவம் தவறிய கனமழை பெய்தது. தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள தரங்கம்பாடி பகுதியில் 12 சென்டிமீட்டர் மழையும், செம்பனார்கோவில் பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்த கனமழையால் காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் உள்ள உமையாள்புரம், அபிஷேக கட்டளை, விநாயகபுரம், நாச்சிக்கட்டளையில் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும், கதிர் முற்றும் தருவாயில் உள்ள பயிர்களும் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கின.

இக்கிராமங்களில் பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் விளங்கும் " ஏ சேனல் வேலன் " வாய்க்காலுக்கும், வயலுக்கும் இடையில் சாலை உள்ளதால், விவசாயிகள் ஆண்டுதோறும் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:'சுமார் 300 சவரன் நகை'.. கொடிவேரி அணையில் திகைக்க வைத்த அதிமுக பிரமுகர்... அறிவுறுத்தி வெளியேற்றிய போலீஸ்!

மேலும் வயலுக்கும், வாய்க்காலுக்கும் இடையில் வயலில் உள்ள தண்ணீர் வாய்க்காலில் வடிவதற்கு அமைக்கப்பட்ட குழாய்களை புதிதாக சாலை போடப்பட்ட போது சேதப்படுத்தியதால் விவசாயிகளால் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் வாழ்வாதாரம் இழப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வயல் வழியாக மட்டுமே தண்ணீர் வடியும் நிலை உள்ளதால் முற்றிலுமாக தங்கள் பகுதியில் சம்பா பயிர்கள் அழிந்து விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக தங்கள் பகுதியில் விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வடிவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் கனமழையால் தரங்கம்பாடி தாலுகாவில் திருக்கடையூர், தரங்கம்பாடி, செம்பனார்கோவில், காழியப்பநல்லூர், தலைச்சங்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20,000 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் விவசாய நிலங்களில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

தண்ணீர் வடிந்தாலும் அறுவடை செய்ய கூடுதல் தொகை செலவாகும் நிலையில் உரிய மகசூல் கிடைக்காது என்பதால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கி முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details