திருப்பத்தூர்:41வது வணிகர் சங்க மாநாடு வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என இன்று (ஏப்.28) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
ஆம்பூர் அடுத்த மாராப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மண்டலத் தலைவர் கிருஷ்ணனின் நினைவேந்தல் மற்றும் திருவுருவப் படத்திறப்பு விழா இன்று (ஏப்.28) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று, கிருஷ்ணனின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விக்கிரமராஜா, “வருகின்ற தமிழ்நாடு வணிகர் சங்க 41வது மாநில மாநாடு விடுதலை முழக்க மாநாடாக மதுரையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடாக நடைபெறும்.
இந்த மாநாடு வணிகர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளை, அத்துமீறல்களை ஒழித்துக்கட்டக்கூடிய மாநாடாக, விடுதலை முழக்கம் என்பது வணிகர்களுக்கு ஏற்பட்ட வரிப்பிரச்னைகள், அடிமைப் பிரச்னைகள், ரவுடிகளால் தொல்லை, அதிகாரிகளால் தொல்லை, இதிலிருந்து விடுவித்து வணிகர்கள் சுதந்திரமாக வணிகம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் விடுதலை முழக்க மாநாடு என்பதை வைத்து இருக்கிறோம்.
இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் பல லட்சம் வணிகர்களை ஒன்றுதிரட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்குப் பிறகு வணிகர்களுக்கு ஓர் திருப்புமுனை ஏற்படும். கண்ணகி நீதி கேட்ட மண் மதுரை மண், அந்த மண்ணிலே நாங்களும் வணிகர்களுக்காக நீதி கேட்கிறோம். 41வது வணிகர் சங்க மாநாடு வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.