தருமபுரி :கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு வளர்த்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள் (40). அவரது கணவர் துரைசாமி கடந்த சில ஆண்டுக்குமுன் இறந்து விட்ட நிலையில் முனியம்மாள் தனது மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.9) மாலை அங்குள்ள கடையில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு டூவீலரில் முனியம்மாள் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த முனியம்மாள், தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையும் படிங்க:மதுரை தனியார் விடுதி தீ விபத்தின்போது நடந்தது என்ன? உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்
அப்போது தலையில் அடிபட்டதில் மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முனியம்மாள் நேற்று (செப்.11) மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரின் மகன் மற்றும் உறவினர்கள், முனியம்மாளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
அதன்படி கல்லீரல், 2 கண்கள், சிறுநீரகம் ஆகியவை தானமாக பெறப்பட்டது.அவை கோவை, சேலம் அரசு மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகம் மற்றும் கோவை தனியார் மருத்துவமனைக்கு கல்லீரல் அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்ததால் முனியம்மாள் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
டீன் அமுதவள்ளி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகேந்திரன், மயக்கவியல் டாக்டர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் மரியாதை செலுத்தினார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 16 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.