பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு ரூ.200 என அதிமுக முத்திரையுடன் டோக்கன் வழங்கப்பட்டதால் பரபரப்பு தேனி:வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தீவிரமாகியுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு, நபருக்கு ரூ.200 என பணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மீனாட்சிபுரம் பேரூராட்சி ஓபிஎஸ் ஆதரவு அணி செயலாளரும், மீனாட்சிபுரம் பேரூராட்சி தலைவருமான திருப்பதி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் போடிநாயக்கனூர் ஓபிஎஸ் ஆதரவு நகர செயலாளர் பழனிராஜ் மற்றும் சில நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் தேனி மாவட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகணபதி சிறப்பு பேச்சாளராக வந்திருந்தார்.
இப்பொதுக் கூட்டத்தில், மீனாட்சிபுரம், துரைராஜபுரம், பொட்டல்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர், பார்வையாளர்களாகப் பங்கேற்ற பெண்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் வழங்கப்பட்டது. அந்த டோக்கன் ஒன்றுக்கு ரூ.200 வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விநியோகம் செய்யப்பட்ட டோக்கனைப் பெறுவதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டோக்கன் பெறுவதற்காக, சில பெண்கள் கைக்குழந்தைகளுடனும், கைத்தடி ஊன்றிய வயதான மூதாட்டிகளும் போட்டி போட்டுக் கொண்டு டோக்கன் பெறுவதில் ஆர்வம் காட்டினர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாரும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். பின்னர் சாலையில் டோக்கன் வழங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்களைப் பொதுக்கூட்டம் நடந்த மேடைக்கு அருகில் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, டோக்கன் பெற ஒருவரையொருவர் பின்னே தள்ளிவிட்டு, போட்டி போட்டுக் கொண்டு ஓடினர். மேலும் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு டோக்கன் பெறுவதே குறிக்கோளாக இருந்தது. அதனால் டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட பகுதியில் மூச்சுத்திணறும் நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி டோக்கன் விநியோகம் குறித்து எதுவும் கண்டுகொள்ளாமல் போலீசார் இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் சில வயதான மூதாட்டிகள் பெண்கள் டோக்கன் பெறாமல் புலம்பிக் கொண்டே ஏமாற்றத்துடன் சென்றதும், ஓட்டு போடும் வயது கூட வராத பள்ளி மாணவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு டோக்கன் வாங்கிய சம்பவமும் அரங்கேறியது.
ஒன்றரை மணி நேரத்தில் நடந்து முடிந்த கூட்டத்திற்கு, சுமார் 2 மணி நேரம் வரை டோக்கன் வழங்குவதற்கான தள்ளுமுள்ளு நடந்தது. முதலில் இதுபோன்ற சம்பவம் நடப்பதே தவறு, அதுவும் இவ்வளவு வெட்டவெளிச்சமாக டோக்கன் வழங்கப்பட்ட சம்பவம் மிகவும் வேதனைக்குரிய விசயம் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்போது தமிழக முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியில் அவர்களுடைய ஆதரவாளர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து நடத்திய இப்பொதுக்கூட்டத்தில், டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'பிரதமர் மோடி இருக்கட்டும்..முதலில் என் மீது கை வையுங்கள் பார்க்கலாம்' - அண்ணாமலை காட்டம்