தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம்" - பிப்.4 ஆம் தேதி கருத்துக்கேட்பு! - EQUAL PAY FOR EQUAL WORK

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பிப்.4 ஆம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கோப்புப்படம்
போராட்டதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 1:10 PM IST

சென்னை:தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு, சம ஊதியம்" வழங்குவது குறித்து பிப்ரவரி 4ஆம் தேதி 5 ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் குழுவின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், ஜூன் 1ஆம் தேதி முதல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வந்தார். மேலும், 2021ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கை வரிசை எண் 311-இல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

போராட்டத்தின் போது மயங்கி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட ஆசிரியர், எதிர்கட்சியில் இருந்த போது மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களிடம் பேசும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்த குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து இந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.

போராட்டதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, அப்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த காகர்லா உஷா, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் நியமனம் செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

தற்போது, அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஊதிய பிரச்சனை சரி செய்யப்படவில்லை எனத் தெரிவித்து, மீண்டும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 2024 பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை 19 நாட்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தினர். அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் வளாகத்திற்குள் அனுமதி அளிக்காமலிருந்ததால், தினமும் காலையில் போராட்டத்தில் ஈடுபடும் போது கைது செய்வதும், மாலையில் விடும் காவல்துறை செய்து வந்தது.

இதையும் படிங்க:"உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கும், இடஒதுக்கீட்டிற்கும் எதிரானது" - டாக்டர்கள் சங்கம்!

இறுதியாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு சென்றனர். இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி தலைமையில் பிப்ரவரி 4ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் (ETV Bharat Tamil Nadu)

அதில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், ஜேஎஸ்ஆர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மற்ற சங்க பிரதிநிதிகளுக்கு வேறு ஒரு நாளில் கூட்டம் நடத்தப்படும் எனவும் தொடக்கக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சமவேலைக்கு சம ஊதியம், ஒரே பணி ஒரே கல்வித் தகுதி இருந்தும், அதாவது 1.6.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்றும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details