வாடகை செலுத்தாததால் ஊட்டி நகராட்சி கடைகளுக்கு சீல் நீலகிரி:உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், வணிக கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா என மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும் கடைகளுக்கு அபராதம் விதித்தும், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில், உதகை நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கடை வாடகை குறித்து நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் நேற்று (பிப்.15) ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், நகராட்சிக்கு கடை வியாபாரிகள் 10 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, வாடகை பாக்கி வைத்த நான்கு கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து, ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட கடையைத் திறந்து பயன்படுத்தி வந்த ஒரு கடைக்கு, மீண்டும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட கடைகளின் வரி பாக்கி உள்ளவர்கள், விரைவாக அரசுக்கு வரிபாக்கியை செலுத்த வேண்டும் என்றும், தாமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உதகை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆய்வின்போது, நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும்..! பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்!