நீலகிரி:தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, உதகை - குன்னூர் இடையே செயல்படும் மலை ரயில் சேவை இன்றும் (டிச.13), நாளையும் (டிச.14) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் லேசான மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேரிடர் மீட்புக் குழு தீயணைப்புத் துறையினர், சாலைகளில் விழும் மரங்களை அகற்றி சாலை போக்குவரத்தைச் சீரமைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தொடர் கனமழை எதிரொலி: விமான சேவைகள் ரத்து?
மேலும், நீலகிரி மலை ரயில் தண்டவாளங்களில் பல இடங்களில் மரங்கள் விழுந்து மலை ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. அங்கு ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, மரத்தை அறுத்து அகற்றி ரயில் போக்குவரத்தைச் சீர் செய்தனர். மேலும், பல இடங்களில் மரங்கள் விழும் நிலையில் உள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிப்படைய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் என இரண்டு நாட்களுக்கு மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக மலை ரயிலில் பயணிக்க ஆர்வமுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின் வழக்கம்போல் நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.