தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"காமராஜரை சொந்தம் கொண்டாட காங்கிரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது" - செல்வப்பெருந்தகை! - Selvaperunthagai - SELVAPERUNTHAGAI

Selvaperunthagai: "காமராஜரை சொந்தம் கொண்டாட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை, தமிழிசை சௌந்தரராஜன், ஜெயக்குமார் புகைப்படம்
செல்வப்பெருந்தகை, தமிழிசை சௌந்தரராஜன், ஜெயக்குமார் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 4:06 PM IST

சென்னை:பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் உள்ள திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அரசியல் கட்சி தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அவர்களைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செல்வப்பெருந்தகை:பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை கூறியதாவது, "காமராஜரின் பிறந்தநாளை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் காமராஜரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவரை சொந்தம் கொண்டாடும் உரிமை காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டும்தான் இருக்கிறது.

எல்லோரும் கொண்டாடும் வகையில் அவர் நன்மை செய்திருக்கிறார். அன்று யார் அவரை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ, அவர்களும் அவரை கொண்டாடுகிறார்கள். இது தான் காலத்தின் மாற்றத்தால் ஜனநாயக பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழிசை சௌந்தரராஜன்:காமராஜருக்கு மரியாதை செலுத்த தகுதியான ஒரே கட்சி பாஜக மட்டும் தான். பெருந்தலைவர் காமராஜர் வழியில் மத்தியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. உணவோடு கல்வியைக் கொடுத்தது பெருந்தலைவர் காமராஜர்.

ஆனால், ஒரு தவறான விளம்பரத்தை செய்து தமிழ்நாடு முதல்வர் இன்று காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து வருகிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்விகரகமான வெற்றிதான் திமுகவுக்கு கிடைத்தது. நல்லாட்சிக்கு முக்கியத்துவம் வழங்குவதை விட தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதையே திமுக முன்னுரிமை வழங்கி வருகிறது என்றார்.

ஜெயக்குமார்:அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "தமிழ்நாட்டில் தொலைநோக்கு பார்வையுடன் அணைகளை கட்டிய தலைவர் காமராஜர். ஆனால், ஜீவாதர உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சியை திமுக செய்து வருகிறது.

காமராஜர் திருவுருவச் சிலைக்கு உரிமை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக. காவிரிக்கும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் துரோகம் விளைவித்த அரசு விடியா திமுக அரசு. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தாதது ஏன்? காவல்துறையினரின் என்கவுண்டரில் சந்தேகம் உள்ளது. மக்களின் சந்தேகத்தை தீர்க்கக்கூடிய பொறுப்பு தமிழ்நாடு அரசிடம் உள்ளது" என தெரிவித்தார்.

ஜி.கே.வாசன்:இறுதியாக பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், "காமராஜரின் ஆட்சியை தமிழ்நாட்டில் மலர, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க மறுக்கிறது. கூட்டணிக்காக திமுக இதனை வேடிக்கை பார்ப்பது ஏற்புடையது அல்ல. உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டியோ அல்லது கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்தோ, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடத்தின் உடல் தகனம்!

ABOUT THE AUTHOR

...view details