கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, கோவை மாவட்டத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக, பாஜகவினர் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், பாஜக மாநிலத் தலைவரும், அக்கட்சியின் கோவை வேட்பாளருமான அண்ணாமலை, கோவையில் ஒரு லட்சம் வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ‘பீப்பில்ஸ் ஃபார் அண்ணாமலை’ என்ற அமைப்பின் சார்பில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் ஏராளமான பொதுமக்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகவும், இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழுக்கம் எழுப்பிய பீப்பில்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பினர், தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு ஜூன் 4ஆம் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.