சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது திருவேங்கடம் என்ற ரவுடியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது என்கவுண்டர் செய்தனர்.
இதையடுத்து மீதமுள்ள 10 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் இதில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல ரவுடியின் மனைவியும், வழக்கறிஞருமான மலர்கொடிக்கு உதவியதாக வழக்கறிஞர் ஹரிகரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ்குமார், பிரபல கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான வட சென்னை அஞ்சலை, திருவள்ளூர் மாவட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஹரிதரன் ஆகியோரை இதுவரை செம்பியம் தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு மூளையாக செயல்பட்ட சென்னை மணலி அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் பிரபல ரவுடி சம்போ செந்தில் என்பவர் உடன் தொடர்பில் இருந்து கொண்டு கொலை குற்றவாளிகளுக்கு பண பரிவர்த்தனை செய்ததும் தெரிய வந்தது.