சென்னை:தமிழகச் சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான கூட்டம் நேற்றும் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் வினா-விடை நேரத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமியிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.
அப்போது பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், போகலூர் ஊராட்சி ஒன்றியம் சத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76 மாணவர்களுக்கு, 3 பள்ளிக் கட்டடங்களில் 6 வகுப்பு அறைகள் உள்ளன. இது பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக உள்ளது.
அதில், ஓட்டுக் கட்டுமானத்தில் ஒரு வகுப்பறை மற்றும் கான்கிரீட் கட்டுமானத்தில் ஒரு வகுப்பறை வட்டார கல்வி அலுவலகத்தின் பயன்பாட்டில் உள்ளது. மேற்காணும் இரண்டு வகுப்பறைகளையும், மாணவர்களின் பயன் பாட்டிற்குக் கொண்டு வர, வட்டார கல்வி அலுவலர்க்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் கட்ட தேவை எழவில்லை" எனக் கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன், போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக ஒரு பள்ளி கட்டுவதற்குக் கோரிக்கையை முன்வைத்தார். அதற்குப் பதில் அளித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர். "2022-23 ஆண்டில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆயிரம் வகுப்பறைகள் கட்டுவதற்காக 800 கோடியும், அதேபோல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 209 கோடி செலவில் ஆயிரத்து 200 வகுப்பறைகள் கட்டவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பணிகள் 90% நிறைவு பெற்றுள்ளது" எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், "கடந்த 2 ஆண்டுகளில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான ஓட்டு பள்ளிக் கூடங்கள் உட்பட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்கள் பழுது நீக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதல் பள்ளி கட்டங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
100 ஆண்டுகள் பழமையான பள்ளியைச் சீரமைக்கக் கோரிக்கை: அதன் பிறகு பேசிய சே.முருகேசன், "பரமக்குடி அடுத்த உரப்புளி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான நடுநிலைப் பள்ளி உள்ளது. ஓட்டுக் கட்டத்தில் அமைந்துள்ள இப்பள்ளி, தரையை விட மூன்று அடி பல்லத்தில் உள்ளது. அந்தப் பள்ளியின் ஆசிரியர், அடிக்கடி வந்து பள்ளியில் மாணவர்களை அமர்த்தவே பயமாக இருப்பதாகப் புகார் அளிக்கிறார். எனவே, உரப்புளி ஊராட்சியில் நடுநிலையில் பள்ளி கட்டித்தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறினார்.
அதற்கு, "பழுதடைந்த ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிக் கூடங்களில் உள்ள 13 ஆயிரம் வகுப்பறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் வகுப்பறைகள் கட்டும் பணியில், 4 ஆயிரம் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் ஓரிரு மாதத்தில் முடிக்கப்படும். இடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டங்களுக்குப் பதிலாகப் புதிய கட்டம் கட்டும் திட்டமும் இருக்கிறது. கண்டிப்பாகக் கட்டித்தரப்படும்" எனத் தெரிவித்தார்.