Farmers Grievance Meeting தென்காசி: தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச் 15) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகள் அடங்கிய மனுக்களைக் கொடுத்தனர்.
அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், இது தொடர்பாக துறை ரீதியான அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து, ஏராளமான விவசாயிகள் காட்டுப்பன்றி, யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாயப் பயிர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவதாகவும், காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலிலிருந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான கோரிக்கைக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி, வருகின்ற மே மாதத்திற்குள் காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும், தேங்காய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரிசி கொள்முதல் விலையை திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல, குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்கி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், இது தொடர்பான கோரிக்கை அரசிற்கு அனுப்பி தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில், கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற விவசாயி எழுந்து, மாவட்ட ஆட்சியருக்கு வணக்கம் என்று கூறி தனது கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்பு, செயல்படாத அதிகாரிகளுக்கும் எனது முதல் வணக்கம் எனவும், அதிகாரிகளுக்கு ஊக்கமருந்து கொடுங்கள், அதிகாரிகள் செழிப்பாக இருந்தால் தான் வேலை பார்ப்பார்கள் என தெரிவித்தார். இதைக்கேட்டு அனைத்து அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கமே ஒரு நிமிடம் அமைதியானது.
தொடர்ந்து பேசிய அவர், செயல்படாத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு அனைத்து விவசாயிகளும் கரஓசை எழுப்பிய நிலையில், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!