தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“மலைவாழ் மக்களுக்காக ஜீப் வசதி” - தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கோவை ஆட்சியர் விளக்கம்! - Lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Election process at Coimbatore: 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோவையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்
கோவையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 10:40 PM IST

கோயம்புத்தூர்:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், துணை காவல் ஆணையர் ஸ்டாலின் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, “கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்களும், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 15 லட்சத்து 93 ஆயிரத்து 168 வாக்காளர்களும் உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி சேர்த்து 3,096 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் பணிபுரியும் அலுவலர்கள் நாளை பிற்பகல் முதலே அங்கு பணிக்குச் செல்வார்கள். வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்களிக்க வரும் பொதுமக்களுக்காக குடிநீர், கழிவறை, சாமியானா பந்தல் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் வாக்களிக்க வரும் சமயத்தில், அவர்களுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலைப்பகுதி மற்றும் கேரள மாநில எல்லையை ஒட்டி கோவை மாவட்டம் அமைந்துள்ளதால், அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, இம்முறை பேருந்து மற்றும் ஜீப் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, கேரள மாநில எல்லையில் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது வாக்குச்சாவடிகளும், துணை ராணுவப் படை மற்றும் சிறப்புத் தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் வாக்குப்பதிவு நடைபெறும்.

யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டு விலங்குகள் வராதபடி வனத்துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நூறு சதவிகித வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு, பல்வேறு தனியார் அமைப்புகளுடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், “3,200 காவல் ஆளிநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், அதில் 950 பேர் ஓய்வு பெற்றவர்கள். 1,796 பூத்களிலும் இவர்கள் பணிபுரிவார்கள். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியற்றை எடுத்துச் செல்லவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 108 அதிவிரைவு சிறப்புப் படையினர் உள்ளனர்.

வெளியூர் ஆட்கள் யாரும் இன்று மாலை 6 மணிக்கு மேல் எங்கும் தங்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் அறிவுறுத்தப்பட்டதுடன் சோதனைகளும் நடத்தப்படும். பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள மையங்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப தயார் நிலையில் சிறப்பு அதிவிரைவுப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்” என்றார்.

பின்னர் பேசிய துணை ஆணையர் ஸ்டாலின், “கோவை மாநகர பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ''பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு'' - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details