சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அதனால் அவருடைய உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது, அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலைக் கண்டுபிடித்து வெளியே எடுத்தனர்.
அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது, அதனுள் 3.5 கிலோ கொக்கைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் ஆகும். இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல் தனி அறையில் வைத்து விசாரித்தனர்.