நுங்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பேட்டி (Credits - ETV Bharat TamilNadu) திருச்சி:தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால், பொதுமக்கள் வெயிலின் சூட்டைத் தணிக்க இளநீர், கரும்புச்சாறு, தர்பூசணி, நுங்கு உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். குறிப்பாக, பனைமரத்திலிருந்து எடுக்கக்கூடிய நுங்கு, சாலைகளில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது திருச்சியில் வெயில் 109 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக, சந்தையில் நுங்கு மற்றும் இதர பழங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட தற்போது தண்ணீர் வரத்து குறைந்ததால், பனைமரத்தில் காய்ப்பும் குறைந்துள்ளது, இதனால் நுங்கு விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பனைமரம் நமது மாநில மரம், தமிழர் வாழ்வோடும் இணைந்துள்ள பனைமரம் "தினைத்துணை நன்றி செயினும் பனைதுணையாக் கொள்வர் பயன் தெரிவார்" என திருக்குறளில் உவமையாக வைத்து குறள் உள்ளது. சங்க கால நூல்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பனையிலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு போன்றவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை உண்டாக்குகிறது. வெயில் காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும், சரும நோய்களுக்கு நுங்கை உடலில் தடவினால் சரும நோய் மற்றும் வியர்க்கூரு மறைந்துவிடும், பனை மரத்திலிருந்து வரும் பதநீர் அருந்தினால் வயிற்றுப்புண் குணமாகும், பனங்கற்கண்டு இருமலுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து நுங்கு வியாபாரிகள் கூறியதாவது, "பனைமரம் அதிகளவு வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதால் தற்போது நுங்கு கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை கரைகள் அருகே அதிக அளவு பனை மரங்கள் நட வேண்டும். கடந்த ஆண்டு மூன்று சுளை நுங்குகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டு சுளை நுங்குகள் பத்து ரூபாய்க்கு தர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இன்றைய தலைமுறையில் பனை மரம் ஏறுவதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் நுங்கு விலை உயர்ந்துள்ளது. மரங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நுங்கு கிடைப்பதே அரிதாகிவிட்டது. இருந்தாலும், வாடிக்கையாக வரும் நபர்களுக்காகவும், வயிற்றுப் பிழைப்பிற்காகவும் மட்டுமே வியாபாரம் செய்து வருகின்றோம். மழை உள்ள காலத்தில் டன் கணக்கில் நுங்கு மூட்டைகளை வைத்து விற்பனை செய்வோம். ஆனால் இப்போது ஒரு மூட்டை, அரை மூட்டை என விற்பனைக்கு கொண்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது" என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பு பணி வாங்கித் தருவதாக மோசடி.. சோழபுரம் வணிக சங்க தலைவர் கைது.. சிக்கியது எப்படி?