சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கிய நிலையில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, சுமார் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மேலும், தேர்வின் வினாத்தாள்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு, அங்கிருந்து தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர்த்து, பிற வகுப்பு மாணவர்களுக்கு காலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையில், அரசுத் தேர்வுத்துறை மூலம் தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர் 9498383076 மற்றும் 9498383075 என்ற எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.