மதுரை:மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து மழை பாதிப்பு குறித்த கேட்டறிந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், "இந்த பகுதி மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எத்தனை ஆண்டுகளுக்கு போர்க்கால நடவடிக்கை எடுப்பீர்கள்.
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல: 13 வருடத்திற்கு முன்பாக நான் இதே கோட்பாடு கோபத்துடன் தான் வந்தேன். தற்பொழுது தம்பி வந்துள்ளார். இருவருக்கும் கொள்கைகள் ஒத்துப் போகவில்லை. இந்திய திராவிடக் கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன். வரலாறு இந்த பிழைப்பை எனக்கு கொடுத்துள்ளது. எனது கடமையை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டு, அதனை செய்கிறேன்.
திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னார் என்றால், அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. அது வேறு இதுவேறு. இது என் நாடு, என் தேசம் இங்கு வாழுகிற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். சிலவற்றுள் எங்கள் கொள்கையிலிருந்து விஜய் மாறுபடுகிறார். மற்றபடி நாங்கள் சொன்னதைச் சொல்கிறார்.
மொழிக் கொள்கையில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. கொள்கை மொழி என்பது எங்கள் தாய் மொழி தான், பாடமொழி, பயிற்றுமொழி எல்லா மொழியும் எங்களுக்கு தமிழ் மொழி தான். தேவையென்றால் ஒரு மொழியை படித்துக் கொள்ளலாம், அதனைக் கொள்கையாக எடுத்துக் கொள்வது, ஏற்க முடியாது.
விஜயை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கருத்தியல் புரட்சி மூலமாக தான் மக்களை வென்றெடுக்க முடியும். அதை நீங்கள் எந்த மாதிரியான கருத்துக்களை வைக்கிறீர்களோ அதை பொறுத்து ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்க வேண்டும். என்னை போன்று செய்தியாளர்களை சந்தித்து பதில் சொல்லி விளக்கம் அளிக்க தெரிய வேண்டும். ஒரு பிரச்சனைக்கு அதன் வேரும், தீர்வும் தெரிய வேண்டும்.
பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்கிறீர்கள். அதை தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு திராவிட மாடல் என்கிறார். நாங்கள் அதனை திருட்டு மாடல் தீய்ந்து போன மாடல் என்கிறோம். திராவிடம் என்பது சமஸ்கிருதம். மாடல் என்பது ஆங்கிலம். தமிழ்நாட்டில் தமிழர் அறம் சார்ந்த ஆட்சி தமிழர் ஆட்சி என்று சொல்ல உங்களால் முடியவில்லை, இது என்ன மாடல்.
விசிக, நாதக கூட்டணிக்கு விஜய் அழைப்பு?: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நீண்ட நாள் கோரிக்கை. நான் மிகத் தெளிவான கொள்கை உடையவன். என் பயணம் என் கால்களை நம்பி தான், உங்களுடைய கால்களை நம்பி பயணிக்க முடியாது. என் இலக்கு என்ன? என் பாதை, நோக்கம் என்ன? என எனக்கு தெரியும். எனக்கென்று ஒரு கனவு உள்ளது. அது என்னுடையது அல்ல என் முன்னோர்களுடைய கனவு. அதை நிறைவேற்ற நான் போராடுகிறேன். நான் தனித்துப் போட்டியிடுவேன் என சொல்லிவிட்டேன். என்னுடைய பயணம் மிகவும் உறுதியானது, நிலையானது.
விஜய் முதலமைச்சராக வாய்ப்புள்ளதா?முதலமைச்சர் காலம் தான் தீர்மானிக்கும். மக்கள் கையில் தான் இருக்கிறது. நாம் இப்போது அதை பேசிக் கொண்டிருப்பது தேவையில்லை. நாங்கள் இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். தம்பி இப்போது தான் வந்திருக்கிறார். அவரை வாழ்த்த வேண்டும்.
பெரியாருடைய கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என விஜய் கூறுகிறார் என்ற கேள்விக்கு? விஜயின் பேச்சை முழுமையாக கேட்கவில்லை. ஆனால், சிறிது போனில் கேட்டேன். பெரியாரின் கடவுள் மறுப்பு ஏற்கவில்லை, பகுத்தறிவை ஏற்கிறேன் என்கிறார். பகுத்தறிவு கொள்கையில் தான் கடவுள் மறுப்பும் உள்ளது. பெண்ணிய உரிமையை ஏற்பேன் என்கிறார்.