ஈரோடு: ஈரோட்டில் தமிழகப்பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் சார்பில் நேற்று நடைபெற்ற தமிழக பண்பாடு கண்காட்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு, கண்காட்சியில் தமிழர்கள் வரலாறு குறித்து வைக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்களையும் மண் சார்ந்த பொருட்களையும் பார்வையிட்டார்.
பின்னர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "திராவிடல்நல் திருநாடு" என்ற வார்த்தையை நீக்கியது என்பது உங்களுக்கு பிரச்னை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "ஆரியங்கோல் வழக்கொழிந்து" என்ற வார்த்தையை தூக்கியது யார்?
திராவிடல்நல் திருநாடு வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பதா?: எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்? திராவிடம் என்றால் என்ன? தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பதா? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது வராத கோபம், 2 வரியைத் தூக்கியதற்கு கொந்தளிப்பதா? தமிழில் எழுத, படிக்கத் தெரியாத மூன்று தலைமுறைகளை உருவாக்கியதுதான் திராவிடத்தின் சாதனை.
திசை திருப்ப முயற்சி:கீழடியில் கண்டெடுக்கப்பட்டது தமிழர் நாகரிகம்தான், திராவிட நாகரிகமோ அல்லது இந்திய நாகரிகமோ அல்ல. ஆளுநரை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் நாங்கள் கொந்தளித்ததால் தான் மாற்றினார்கள் என்று சொல்வதற்கு தான் ஆளுநர் விவகாரத்தை பேசி வருகின்றனர். தீபாவளிக்கு தற்காலிகமாக 1,500 மதுக் கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கவனத்தில் கொள்ளாத வகையில் திராவிடம் விடப்பட்டது என்ற பிரச்சினை பெரிதாகப்பட்டுள்ளது.