தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, அவரை ரசிக்கமட்டும் தான் செய்வார்கள், ஆனால் தேர்தல் வரும்போது எனக்கு தான் மக்கள் வாக்குச் செலுத்துவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இடதுபக்கம் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வலதுபக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (ETV Bharat Tamil Nadu)
தேனி: நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிகள் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் தம்பி விஜயை ரசிப்பார்கள், ஆனால் எனக்கு தான் வாக்களிப்பார்கள் என செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிகழ்வில் நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கட்சியின் செயல்பாடுகள், அதன் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது;
இனத்தின் எதிரி, குலத்தின் எதிரி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு. (ETV Bharat Tamil Nadu)
“இந்தியாவிலேயே தொடர்ந்து தனித்து நிற்கக்கூடிய கட்சி, பலமுறை தோல்வி கண்ட பிறகும் தனித்து நிற்கின்ற ஒரே கட்சி நாம் தமிழர் தான். இந்தியாவிலேயே அதிகம் வரி செலுத்துகிற மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கின்றது. ஆனால் எங்கள் வரியை பெற்றுக்கொண்டு எங்களுக்கே திரும்பி தர மறுக்கிறது ஒன்றிய அரசு. பாஜகவும், காங்கிரசும் கட்சிகள் தான் வேறு; அவர்களின் திட்டம் ஒன்று தான். என் இனத்தின் எதிரி காங்கிரஸ், என் குலத்தின் எதிரி பாஜக.”
“கட்சி தொடங்கும்போது நடிகர்கள் விஜய், ரஜினி கமல் ஆகியோர் தங்களது ரசிகர் மன்றத்தில் உள்ள ரசிகர்களைச் சந்தித்தார்கள். நான் ரசிகர்களை சந்திக்காமல், 36 லட்சம் வாக்குகளை பெற்றேன். தவெக தலைவர் விஜயுடன் இருக்கும் பாதி ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள். விஜயை ரசிப்பார்கள்; ஆனால் எனக்கு தான் வாக்கு செலுத்துவார்கள்,” என்றார்.
தொர்ந்து பேசிய சீமான், “ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என விஜய் கூறுவது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எனவே, கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். யார் யாருடன் கூட்டணிக்கு செல்வது என்பது அவரரவர்களின் உரிமை. ஆனால், நாங்கள் என்றுமே தனித்து தான் போட்டியிடுவோம்.”
“ஆட்சி மாற்றம் ஆள் ஏமாற்றம் என்பது எங்கள் கொள்கை இல்லை. அடிப்படை அரசியல் மாற்றம் என்பது தான் எங்களின் கொள்கை. நான்கு, ஐந்து சீட்டுகள் பெறுவது தான் எங்கள் இலக்கு என்றால் ஜெயலலிதா, மோடி அழைத்த போதே சென்றிருப்பேன். நான் நாட்டுக்காக வந்தவன்; 2026 ஆம் ஆண்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும்,” என்று கூறினார்.