சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு யாருக்கும் அடிமைப்படக்கூடாது என போராடியவர். அன்னை நிலத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட ஆங்கிலேயர் எடுத்து விடக்கூடாது என்றும் மக்கள் யாருக்கும் அடிமையாகி விடக்கூடாது என்றும் போராடியவர். அடிமை வாழ்வை விட சுதந்திர சாவு மேலானது எனக் கூறியவர்" என புகழ்ந்தார்.
பின்னர், சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "கள்ளச்சாராயம் விற்றவர்கள், 31 நாட்களில் 100க்கும் மேலான கொலை செய்தவர்கள், கள்ளக்குறிச்சி மரணங்கள், கடந்த ஆண்டு மரக்காணம் மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என இதில் தொடர்புடையவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம், மேடையில் பேசிய ஒரே ஒரு குற்றத்திற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்திருக்கிறார்கள். அவர் அவதூறாகப் பேசவில்லை, ஏற்கனவே இருந்த பாடலைத் தான் பாடினார். நானும் அந்த பாட்டைப் பாடுகிறேன், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்" எனக் கூறிய சீமான் சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை பாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் தீய ஆட்சியின் தொடக்கம் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான். அவரது ஆட்சிக் காலத்தில் தான் ஊழல், கொலை, கொள்ளை, லஞ்சம், அநாகரிக அரசியல், சாராயம் உள்ளிட்டவை வந்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி குறித்து மு.க.ஸ்டாலின் பேசிய பதிவுகள் எல்லாம் இருக்கிறது.
நீங்கள் பேசினால் கருத்துரிமை, நாங்கள் பேசினால் அவமதிப்பா? சாட்டை துரைமுருகனை கருணாநிதியைப் பற்றி தவறாக பேசியதற்காக கைது செய்திருக்கிறார்கள். கருணாநிதி என்ன இறைத்தூதரா, இயேசுவா, பகவான் கிருஷ்ணனா" என சரமாரி கேள்வி எழுப்பினார்.