மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளின் சகோதரி திருமண விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் பேசியதாவது, "என்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் என்னுடைய தங்கையின் திருமணம் ஆகும். முதன்முதலாக நாகப்பட்டினத்தில் வேளாண்குடி மக்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்காக மணியரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் என்னுடைய தங்கை காளியம்மாள் பங்கேற்று பேசினார்கள்.
அவர் பேசிய பேச்சைக் கேட்டு நான் அவரிடத்தில் பேசினேன். மீனவர் சொந்தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அவர்களின் பாதுகாப்பான எதிர்கால நல்வாழ்க்கைக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி இயங்கிக் கொண்டிருந்தவர் அவர்.
அப்போது மீனவ சொந்தங்களின் இன்னல்களை நானும் அறிவேன். காளியம்மாளும் அதை எடுத்து பேசிக்கொண்டே இருந்தார். நீ பேச வேண்டிய இடம் இந்திய நாடாளுமன்றம் எனக் கூறி வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் நிறுத்தி இருந்தேன். வடசென்னைக்கு தொடர்பு இல்லை என்றாலும் பெருவாரியான வாக்குகளை மக்கள் அளித்திருந்தார்கள். நாங்கள் நாடாளுமன்றத்தில் போய் பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறோம்.