சென்னை:தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்திற்குப் பதிலாக வேறு மைக் சின்னம் பொருத்துவதால் வாக்குகள் பாதிக்கும், எனவே உடனடியாக தங்களின் மைக் சின்னத்தைப் பொருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சங்கர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் சங்கர் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், “இந்தியத் தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ள மைக் சின்னத்திற்குப் பதில் வேறு ஒரு மைக் சின்னம் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சின்னமாக வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. அதனைத் தடுத்து நிறுத்தி, தங்களுக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தைப் பொருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”, என குறிப்பிடப்பட்டுள்ளது.