சென்னை:இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் தேர்வு கடந்த 18ஆம் தேதி நாட்டில் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.
வழக்கமாக கணினி வழியில் நடைபெறும் இந்த தேர்வு, இந்த முறை ஓஎம்ஆர்(OMR) சீட் முறையில் நடைபெற்றது. இந்நிலையில், கார்பன் காப்பி இல்லாமல் வழங்கப்பட்டதால் இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
நாடு முழுவதும் 317 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1205 தேர்வு மையங்களில் இரண்டு பகுதிகளாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்த நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சைபர் க்ரைமிலிருந்து யுஜிசிக்கு கிடைத்த தகவலை அடுத்து யு.ஜி.சி நெட் (UGC NET 2024) தேர்வினை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.இதனையடுத்து புதிய தேர்வு தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இந்த முறைகேடுகள் குறித்தான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.