வேலூர்:வேலூர் மாவட்டம் அடுத்த அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி எம்.எல்.ஏ.ராஜா. இவர் மீது பாகாயம், அரியூர், வேலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
புழல் சிறை வார்டன் உட்பட 3 பேரை 2020ஆம் ஆண்டு ஒரே இரவில் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்த வழக்கில் ரவுடி ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், ராஜா நேற்று (ஜூலை 02) டீ குடிப்பதற்காக தனது வீட்டிலிருந்து டீ கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். டீ குடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லும்போது, அதிவேகத்தில் வந்த கார் ஒன்று ராஜாவின் இருசக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, நிலை தடுமாறி கீழே விழுந்த ரவுடி ராஜாவை, காரில் இருந்தவர்கள் அரிவாளுடன் இறங்கி சுற்றி வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், நிலைகுலைந்த ரவுடி ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தததாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் இருந்த சிலர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த அரியூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவல் துறையினருடன் சென்று சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுமட்டும் அல்லாது, ராஜா கொலையைத் தொடர்ந்து அரியூர் பகுதியில் 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் மூலமாக, கொலையில் தொடர்புடைய நபர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்த எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வேலூர் தாலுக்கா கணியம்பாடி அருகே வள்ளம் சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரவுடி ராஜாவை கொலை செய்தவர்கள் தப்பிச் சென்ற கார் அடையாளம் காணப்பட்டு கொலையாளிகள் நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர்.
இதனை அடுத்து, போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நான்கு பேரும் அரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு, அஜித் குமார், ராஜேஷ் மற்றும் தேஜேஷ் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தான் எம்.எல்.ஏ.ராஜாவை கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தற்போது, அவர்களிடம் அரியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய சிலர் தப்பி ஓடிய நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது கொலை வெறி தாக்குதல்; சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு!