சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியான நிலையில், இந்த தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேரில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி 15 இடங்களில் 12 இடங்கள் வட மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.55% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்துக் கவலையடையக் கூடாது. அடுத்த மாதமே துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.58% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவிகள் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும் மேல்நிலைக் கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பது வருத்தமளிக்கிறது. பெண்களைக் குறைந்தபட்சம் பட்ட மேற்படிப்பு வரையிலாவது படிக்க வைக்கப் பெற்றோர்கள் முன்வர வேண்டும்.
தேர்ச்சி விகிதங்களில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்திருப்பதும், வடக்கு மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் முதன்முறையாக 10ஆம் இடத்தை பிடித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இதை விதிவிலக்காகவே பார்க்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையான வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களின் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து கவலை அளிப்பவையாகவே உள்ளன.