வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைவதால், அக்டோபர் 16ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்தது. தற்போது, அதிகனமழைக்கான வாய்ப்புகள் குறைவு எனவும், மிதமான மழை தொடர்ந்து இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில், மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 360 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கி.மீ தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 450 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
தொடர்ந்து, மேற்கு - வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும், நல்லூருக்கும் இடையே நாளை (அக்டோபர் 17) காலை கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பதம்பார்த்த மழை:
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 சென்டிமீட்டரும், அதற்கு அடுத்தபடியாக திருவிக நகர், கொளத்தூர் மற்றும் அம்பத்தூரில் 22 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் 131 மில்லிமீட்டர் அளவு மழைப்பொழிவு இருந்தது.
போர் கால அடிப்படையில், வெள்ள நீர் வெளியேற்றம், தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களுக்கு கொண்டுவருவது போன்ற செயல்பாடுகளை அரசு கண்காணித்து வந்தது. தொடர்ந்து துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்தது. தூய்மைப் பணியாளர்கள், மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, காவல்துறை, போக்குவரத்து காவல் பிரிவு, வருவாய்த் துறை என அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கியத் துறைகளின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கவனித்துவந்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மழை பாதித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று கள நிலவரங்களை ஆராய்ந்து மூத்த அமைச்சர்களுடன் இணைந்து தீர்மானங்களை எடுத்தார். துரிதமாக நடந்த மீட்புப் பணிகளாலும், மழை குறைந்ததாலும் சென்னை இம்முறை வேகமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.
சீர்செய்யப்பட்ட சுரங்கப்பாதைகள்:
மொத்தம் சென்னையில் 21 சுரங்கப்பதைகளில் மழைநீர் தேங்கியது. அதில், இங்கு கீழ்வருமாறு பட்டியலிடப்பட்டிருக்கும் சுரங்கபாதைகளில் நீர் வெளியேற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதை அரசு தங்களின் செய்திக்குறிப்பில் உறுதி செய்துள்ளது.
- கத்திவாக்கம் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை
- மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
- வியாசர்பாடி சுரங்கப்பாதை
- எம்.சி. ரோடு சுரங்கப்பாதை
- ஸ்டேன்லி நகர் சுரங்கப்பாதை
- ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை
- கொங்குரெட்டி சுரங்கப்பாதை
- பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை
- வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
- ஹாரிங்டன் சுரங்கப்பாதை
- நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை
- ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை
- துரைசாமி சுரங்கப்பாதை
- மேட்லி சுரங்கப்பாதை
- ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
- பஜார் ரோடு சுரங்கப்பாதை
- மவுண்ட் சுரங்கப்பாதை
- தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை
- பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
- அரங்கநாதன் சுரங்கப்பாதை