தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் நடவு பணியிலும் இறங்கிய வடமாநில தொழிலாளர்கள்.. 100 நாள் வேலையால் விவசாயம் பாதிப்பு? - Lack of Manpower on Agriculture - LACK OF MANPOWER ON AGRICULTURE

மயிலாடுதுறையில் விவசாய கூலித் தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்குச் செல்வதால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வடமாநில தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் விவசாயம் செய்யும் காட்சி
வடமாநில தொழிலாளர்கள் விவசாயம் செய்யும் காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 3:23 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்குச் செல்வதால் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, வடமாநில தொழிலாளர்கள் பாடல்களைப் பாடி உற்சாகத்துடனும், மிக நேர்த்தியாகவும் குறைந்த சம்பளத்தில் சம்பா நடவு பணியில் ஈடுபடுவது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காவிரி கடைமடைப் பகுதியாக இருக்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நிலத்தடி (பம்புசெட்) நீர் மற்றும் காவிரிநீரை நம்பி அதிக அளவில் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள் விவசாயம் செய்யும் வீடியோ (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், விவசாயப் பணிகளுக்குத் தேவையான ஆட்கள் கிடைக்காததால் பல ஆண்டுகளாக விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நடவு செய்தல், அறுவடை பணிகளை இயந்திரம் மூலம் விவசாயிகள் மேற்கொண்டு வந்தாலும் சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும் என்பதாலும், இயந்திர நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைவதைத் தவிர்ப்பதற்கான பல விவசாயிகள் பழைய முறைப்படி கூலி ஆட்களை வைத்து நாற்று பறித்து பெண் தொழிலாளர்கள் மூலம் நடவு செய்து வருகின்றனர்.

ஆனால், தற்போது பெண் கூலித் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு சென்றுவிடுவதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி, குறுவை சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விவசாயப் பணிகளின் போது 100 நாள் வேலையை நிறுத்தி வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தும், எந்தவொரு பயனுமில்லை. தற்போது, ஆட்கள் பற்றாக்குறையால் வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "6 ஆண்டுகளாக காலியாக உள்ள தேர்வாணையர் பதவி" - பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புகார்!

மயிலாடுதுறை அருகே ஆனந்தக்குடி, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வடமாநில ஆண் தொழிலாளர்கள் சம்பா நடவுக்கு நாற்று பறித்து, அவர்களே நடவு செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு 5,000 ரூபாய் சம்பளத்தில் 11 தொழிலாளர்கள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஏக்கர் வரை நடவு பணிகளை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள், நடவு பணியின்போது களைப்பு தெரியாமல் இருக்க வடமாநில பாடல்களை பாடி உற்சாகத்துடனும் மிக நேர்த்தியாகத் திருந்திய நெல் சாகுபடி முறையில், கை நடவு செய்து வருகின்றனர். குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுவது தங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் நம்நாட்டின் பாரம்பரியம் மறைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details