சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளில், வடசென்னை தொகுதியும் ஒன்று. 'நார்த் மெட்ராஸ்' என்று அனைவரால் அன்போடு அழைக்கப்படும் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர், ராயபுரம், திருவொற்றியூர் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதுவரை வடசென்னை தொகுதிகளில், திமுக 11 முறையும், இடதுசாரிகள் 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும், அதிமுக 1 முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வென்றுள்ளனர்.
அபார வெற்றிப் பெற்ற திமுக:கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மொத்த வாக்காளர்கள் 14,87,461 உள்ள நிலையில், ஆண்கள் 7,28,679 வாக்காளர்களும், பெண்கள் 7,58,329 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 456 வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 9,55,545 வாக்குகள் (67.2 %) பதிவாகின.
இத்தொகுதியில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி (திமுக) 5,90,986 (61.85 %) வாக்குகளை அள்ளினார். அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக - அதிமுக கூட்டணி) 1,29,486 (13.55%) வாக்குகளும், காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) 60,515 (6.33%) வாக்குகளும் பெற்றனர். மௌரியா (மநீம) 1,03,167 (10.8%) வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட சந்தானகிருஷ்ணன் 33,277 (3.48%) வாக்குகளும் விழுந்தன. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4,61,518 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
2024 தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள்: திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அமுதினி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பதிவான வாக்குகள்:வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 14,96,224 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7,30,395, பெண் வாக்காளர்கள் 7,65,286 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 543 பேர். இதில் 8,99,367 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 60.11% பேர் வாக்களித்துள்ளனர்.
திமுக வேட்பாளரின் பலம்: திமுக சார்பில் போட்டியிட்டுள்ள வேட்பாளர் கலாநிதி வீராசாமி சிட்டிங் எம்பியாக இருப்பதால் தொகுதியில் பலரும் அவரை அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை அதிக முறை வெற்றி பெற்றிருப்பதும், கலாநிதி வீராசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்திருப்பது பலமாக கருதப்படுகிறது.
அதிமுக வேட்பாளர்: அதிமுகவை பொறுத்தவரையில், ராயபுரம் ஆர்.மனோ காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவுக்கு வந்ததும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.மனோ ராயபுரம் தொகுதியில் பலமுறை அதிமுக, காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டதால் பிரபலமாகவே இருக்கிறார். இவருக்கு ஆதரவாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வடசென்னை தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இளைஞர்களை குறிவைத்த நாதக வேட்பாளர்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மருத்துவர் அமுதினி இளைஞர்களிடையே பிரபலமாக இருப்பதால், அவர்களை பிரதானமாக குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமுதினிக்கு வாக்கு சேகரித்தார் என்பது அவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
தொகுதியில் பிரபலமான பாஜக வேட்பாளர்: பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். வடசென்னையை பொறுத்தவரையில் பால் கனகராஜ் மக்களிடையே அறியப்பட்ட வேட்பாளராகவே களத்தில் இருந்தார். வேட்பாளர் பால் கனகராஜ்க்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பலமுனை போட்டி: 2019 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மௌரியா ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்த நிலையில், இந்த முறை அக்கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் நாம் தமிழர் கட்சிக்கும் இத்தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், கடந்த முறையைவிட இம்முறை போட்டி கொஞ்சம் கடுமையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என்று நான்கு முனைப் போட்டி நிலவும் வடசென்னையில் இம்முறை வெற்றிப் பெற போவது யார் என்பது ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க:தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024, தருமபுரி தொகுதி: இருமுனைப் போட்டியில் வெல்லப் போவது யார்? - Lok Sabha Election 2024