கோயம்புத்தூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னதாக பிப்.26ஆம் தேதி தமிழகத்தின் முக்கியப் புள்ளிகள் பாஜகவில் இணையவுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கியமான நபர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் பாஜகவில் இணையலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று (பிப்.26) மாலை கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இணைப்பு விழா நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என பாஜக மாநில தலைவர் இன்று மீண்டும் தெரிவித்தார்.
ஆனால் பாஜகவில் இணைய எந்த கட்சியினருமே முன்வரவில்லை. அதனால் அங்கிருந்த பாஜக நிர்வாகிகள், செய்தியாளர்கள் பல மணிநேரம் காத்திருந்தனர். மேலும் ஹோட்டலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வராத நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாஜகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி பிரதமரின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி நாளை(பிப்.27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வர உள்ளார். 'என் மண், என் மக்கள் யாத்திரை' 234 தொகுதிகளிலும் மக்களின் பேராதரவோடு நடந்தது. பிரதமர் மோடியின் 10 ஆண்டு சாதனையை எடுத்துச் செல்லும் வகையிலும், திமுக அரசின் தோல்விகளை எடுத்துச் செல்லும் யாத்திரையாக இருந்தது.
எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத வகையில் மிகப் பிரமாண்டமாக நாளை(பிப்.27) நிகழ்ச்சி நடைபெறும். பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக ஆட்சியில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கானத் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்க்கும் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளோம். பிரதமர் மோடியின் வருகை செய்தி மக்களிடம் சேர வேண்டும். மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நிகழ்ச்சி தள்ளிப் போய் உள்ளது.
தமிழ்நாடு வேகமாக வளர காரணம் மோடியின் தனிப்பட்ட அக்கறையே காரணம். பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியிலிருந்தும் பாஜகவிற்கு வர உள்ளார்கள். மாற்றுக் கட்சியினர் மோடியின் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து அவர்களாக வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.