தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை, விருதுநகரில் கைகளால் மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள் இல்லை! - HUMAN WASTE SCAVENGERS

மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள் இல்லை என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2024, 7:10 AM IST

மதுரை: மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறையை தடை செய்ய கோரிய வழக்கில், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சகாய பிலோமின் ராஜ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "மனிதர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் விதமாக தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

மதுரையில் 85 பேரும், விருதுநகரில் 169 பேரும் கைகளால் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கணக்கெடுக்கும் பணிகள் நடப்பதாக மாவட்ட நிர்வாகத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை அடையாள அட்டை வழங்கவில்லை. இதனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே, சட்டப்படி அடையாள அட்டை வழங்க கண்காணிப்பு குழு அமைத்து நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்," என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:வேங்கைவயல் விவகாரம்; குரல் மாதிரி பரிசோதனை நிறைவு!

இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 16) திங்கட்கிழமை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய இரு மாவட்டத்திலும் மனிதர்களை வைத்து மனித கழிவுகளை அகற்றும் பணியில் யாரும் ஈடுபடுத்தப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், "மனிதர்களை கொண்டு மனித கழிவுகள் அகற்றப்படுவதில்லை என்றால், அது தொடர்பாக மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்," என்று கூறி விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details